தமிழர்கள் வாழும் நாடுகளான இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, இந்தோனேசியா, தாய்லாந்து, மொரீஷியஸ், ஃபிரான்ஸ், மியான்மர், அமெரிக்கா போன்ற நாடுகளில் வாழும் தமிழர்களால் பொங்கல்,தீபாவளிக்கு அடுத்து மிக சிறப்பாக கொண்டாடும் ஒரு பண்டிகை “தைப்பூசம்”.

தைப்பூசம் என்பது உலகெல்லாம் கட்டிக்காக்கும் அன்னை பராசக்தி பரமசிவன் மைந்தன் முருகப் பெருமானுக்கு கொண்டாடப்படும் விழாவாகும். தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம் என்பர். தைப்பூசம் ஆண்டுதோறும் தை மாதத்தில் பூச நட்சத்திரமும் பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகனுக்கு எடுக்கப்படும் விழாவாகும்.தை மாதத்தில் 27 நட்சத்திரங்களில் 8 ஆவது நடசத்திரமான பவுர்ணமியுடன் கூடிய  பூச நட்சத்திரம்தான் தைப்பூசம் என்கிறார்கள்.

தைப்பூசத்தின் சிறப்புகள்

சிவபெருமான் உலகத்தை இந்நாளில்தான் உருவாக்கிய நாள்.
தைப்பூசத்தன்று தான் உலகம் தோன்றியதாக ஒரு ஐதீகம்.
முருகன் தமிழ்க்கடவுள் ஆவார். முருகன் என்றால் அழகு என்று பொருள். முருகன் தேவ சேனாதிபதி (தேவர்களின் சேனாதிபதி) ஆகையால் இவர் ஒரு போர்க்கடவுள் ஆவார். தை பூசத்தன்று முருகன் தருகாசுரனை வதம் செய்த நிகழ்வு ஒரு விழாவாக பழனியில் அனுஷ்டிக்கப்படுகிறது. சிவபெருமான் உமாதேவியுடன் இருந்து சிதம்பரத்தில் ஆனந்த நடனம் ஆடி, தரிசனம் அளித்த நாள் தைப்பூசம் என்பர். சிதம்பரத்திற்கு வந்து அரும்பெரும் திருப்பணிகள் செய்து, நடராஜரை இரணியவர்மன் என்னும் மன்னன் நேருக்கு நேராகத் தரிசித்தது இந்நாளிலேயே. இக்காரணங்களுக்காகவே சிவன் கோயில்களில் தைப்பூசத்தன்று சிறப்பு அபிஷேகங்களுடன் பூஜைகள் நடத்தப்படுகின்றன. தேவர்களில் குருவாகிய பிரகஸ்பதியின் நட்சத்திரம் பூசம் என்பதால் தைப்பூசத்தன்று குருவழிபாடு செய்வது மிகுந்த பலனைத் தரும் என்பர். வள்ளலார் இராமலிங்க சுவாமிகள் ஒரு தை மாத வெள்ளிக்கிழமை புனர்பூச நட்சத்திரத்தன்று தான் ஒளியானார். இதனைக் குறிக்கும் விதமாக அவர் ஒளியான வடலூருக்கு அருகில் உள்ள மேட்டுக்குப்பத்தில், தைப்பூசத்தன்று இலட்சக்கணக்கானோர் கூடி வள்ளலார் விழாவைக் கொண்டாடுகிறார்கள்.